புதுடெல்லி: செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான மேல்முறையீட்டு மனு நேற்று இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,‘‘செந்தில் பாலாஜி ஒன்றும் குற்றவாளி கிடையாது. அவரை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி போபண்ணா, ‘‘ஒருவரை ஒரு விசாரணை அமைப்பு எதற்காக கைது செய்கிறது. அவரிடம் இருந்து மேலும் அதிகமான புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தானே? சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19ன் கீழ் ஒருவர் குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய முடியும் தானே?’’ என கேள்வி எழுப்பினார். அப்போது வழக்கறிஞர் கபில் சிபல் குறுக்கிட்டு , அமலாக்கத்துறை விசாரிக்கலாமே தவிர கைது செய்ய முடியாது என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.