சென்னை: சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தின் 2ம் கட்ட சுற்றுப்பாதை உயரம் அதிகரிக்கும் பணிகள் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து செப்.2ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 63வது நிமிடத்தில் ஆதித்யா விண்கலம் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது புவி வட்டபாதையில் சுற்றி வரும் ஆதித்யா விண்கலத்தின் 2ம் கட்ட உயரம் அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு:
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் 2ம் கட்ட சுற்றுப்பாதையின் உயரம் அதிகரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மொரிஷியஸ், பெங்களூரு மற்றும் போர்ட் பிளேயரில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையங்கள், உயரம் அதிகரிக்கப்பட்ட போது விண்கலத்தை கண்காணித்தது. அடுத்தக்கட்ட உயரம் அதிகரிக்கும் பணி செப்.10ம் தேதி அதிகாலை 2.30மணியளவில் நடைபெறும்.