சென்னை: தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர்ஷாஜி அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திராயன் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்டது. விண்கலம் ஏவப்பட்ட சிறிது நேரத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவருக்கு அடுத்ததாக, ஆதித்யா-எல்1 திட்டத்தின் இயக்குநரான நிகர் ஷாஜி மேடையேறினார். தமிழ் நாட்டின் தென்காசி மாவட்டம் செங்காேட்டையை பூர்வீகமாகக் கொண்ட அவர் மேடையேறி, ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் திட்டக்குழுவின் கனவு நிறைவேறியுள்ளது, என்றார்.
விண்கலம் வெற்றிகரமாக தனது இலக்குப்பாதையில் பயணிப்பதாக அவர் கூறியதும், அரங்கில் இருந்த விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.“விண்கலம் தனது 125 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. விண்கலம் இலக்கை அடையும்போது, இந்திய விண்வெளித்துறையின் மிகப்பெரிய பொக்கிஷமாக ஆதித்யா-எல்1 இருக்கும்,” என்றார். அரங்கம் மீண்டும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.