திருச்சி: ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வசதிக்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிய பக்தர்கள், கட்டணம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டனர்.
கும்பகோணம் பட்டீஸ்வரம், தேனி புரீஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கையம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். இதேபோல தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். புதுச்சேரி அடுத்த வில்லியனூர், திருக்காஞ்சியில் உள்ள கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆடி பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.
புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். தேரில் காட்சியளித்த காமாட்சியம்மனை பக்தர்கள் வழிபட்டனர். திருசெந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 31ம் தேதி நடைபெறவுள்ளது.