சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுத்தும் வகையில் உருவாக்க உரிய சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டது. இந்த ஆணையம் சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி பி.ஆர்.சிவகுமார் தலைமையில் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பணியிடத்தில் ஜெ.ரேகா பிரியதர்ஷினி என்பவரை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிதாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.