தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவிருந்த இடம் அருகே மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுகிறார். இதனிடையே, நேற்று மாலையில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அருகே வாழை தோட்டங்களில் ஏற்பட்ட தீ அந்த பகுதி முழுவதும் பரவியது. இதில் பனை மற்றும் தென்னை மரங்கள் எரிந்தன.
ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி இரவிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக ஆதிச்சநல்லூரில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவிருந்த இடம் அருகே ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பனை மரங்கள் தீ விபத்தில் கருகிய நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சி மேடையில் இருந்து 100 மீட்டர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வாகனங்கள், உணவகம், மரங்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து நடந்த இடத்தை வருவாய் துறை அதிகாரிகளும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.