திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுரங்க பேட்டை பகுதியில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொல்குடியினர் வேளாண்மை, மேலாண்மை திட்டத்தின் கீழ் 290 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா தலைமையில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் செயலாளர் மா.மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழக அரசு, பழங்குடியினர் நலத்துறை மூலமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின பயனாளிகளுக்கு வாழ்வாதார திட்டத்திற்கான உபகரணங்கள் இன்று வழங்கியுள்ளது. பூண்டி ஏரி, சதுரங்கப்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு, 2024 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட திட்டமான ஐந்திணை திட்டத்தின் முக்கிய கட்டமாகும். மொத்தம் ரூ.1565.36 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும் ஐந்திணை திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 7000 பழங்குடியின பயனாளிகள் பயனடைவார்கள்.
மீன்பிடி படகு, மீன்பிடி வலை, மீன் விற்பனைக்கான உபகரணங்கள் மற்றும் ஆடு, கோழி வளர்ப்பதற்காக கால்நடைகள் பயனாளிகளுக்கு இன்று உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பேர், பட்டறைபெரும்புத்தூர், பூண்டி மற்றும் எல்லப்ப நாயுடுபேட்டை, பழவேற்காடு, கோட்டைக்குப்பம் ஆகிய 6 ஊராட்சிகளைச் சேர்ந்த 290 பழங்குடியின பயனாளிகளுக்கு இந்த அத்தியாவசிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அவர்கள் சுயசார்பு பெற்று, தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
பழங்குடியின மீனவர்களின் வளர்ச்சிக்காக ரூ.37.19 லட்சம் மதிப்பிலான திட்டத்தின் மூலம் 90 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். மேலும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு மாதிரி திட்டம் தொடங்கியுள்ளது. ரூ.2.02 ேகாடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், விவசாயிகளுக்கு தேவையான திறன்பயிற்சி மற்றும் உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் பழங்குடியின விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
100 பழங்குடியின குடும்பங்களுக்கு வண்ண மீன் வளர்ப்பு, தொழில்நுட்பத்துடன் கூடிய நண்டு வளர்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பண்ணைகள் ஏற்படுத்தி பயிற்சிகள் வழங்குவதற்காக ரூ.87.61 லட்சம் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 290 பயனாளிகள் ரூ.176.88 லட்சம் மதிப்பீட்டில் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, திட்ட மேலாளர் பொன் வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.