Monday, February 26, 2024
Home » கல்வியில் சாதித்த ஆதி திராவிடர், பழங்குடியின மக்கள் தொழில் துறையிலும் உயரங்களை தொடதமிழ்நாடு அரசு துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கல்வியில் சாதித்த ஆதி திராவிடர், பழங்குடியின மக்கள் தொழில் துறையிலும் உயரங்களை தொடதமிழ்நாடு அரசு துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

by Dhanush Kumar

சென்னை: கல்வியில் சாதித்துள்ள ஆதி திராவிடர், பழங்குடியின மக்கள் தொழில்துறையிலும் உயரங்களைத் தொட தமிழக அரசு துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

ஆதி திராவிடர் பட்டியலினத்தைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். தொலைநோக்கு பார்வையோடு தான் கலைஞர், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி வாரியம் தாட்கோவை 1974ல் உருவாக்கினார். ஆரம்பத்தில் அந்த வாரியம், ஆதி திராவிடர்களுக்கு வீடு கட்டி கொடுக்கின்ற ஓர் அமைப்பாக இருந்தாலும், இன்றைக்கு அது பல தொழில்முனைவோரை உருவாக்க உதவி புரிந்து வருகிறது. திறன் சார்ந்த பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. அதனால் தான் இந்தியாவிலேயே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோர்களாக இருக்கிற மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு கொண்டிருக்கிறது.

ஆதி திராவிடர்கள், பழங்குடியின மக்கள் தொழில் துறையில் சாதிக்க வேண்டுமென ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதியத்தை முதல்வர் கடந்த நிதியாண்டில் உருவாக்கினார். ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தும் மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. இந்த திட்டம் மூலம், தொழில் தொடங்க விரும்பும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 35 சதவீதம் வரை மானியமும், ஒன்றரை கோடி ரூபாய் வரையும் கடனுதவியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு, நடப்பு நிதியாண்டில் மட்டும், ரூ.100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. கல்வியில் சாதித்துள்ள ஆதி திராவிடர் பழங்குடியின மக்கள், அடுத்து தொழில்துறையிலும் இன்னும் பல உயரங்களைத் தொட அரசு என்றைக்கும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், வெங்கடேசன், மு.கே.கிரி, அமுலு விஜயா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு. கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

14 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi