விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 4 நாட்கள் சென்றுவர அனுமதியளிக்கப்பட்டது. இதற்காக, தீயணைப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று 70,000 பக்தர்கள் சென்றுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக வனப்பகுதியில் ஆங்காங்கே பக்தர்கள் நிறுத்தப்பட்டனர். மேலும் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இன்று பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அடிவாரத்தில் காத்திருக்கின்றனர்.