சித்தூர் : சித்தூர் அருகே ஆடி அமாவாசையொட்டி ஓம் சக்தி கோயிலில் பெண்கள் தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்தனர். சித்தூர் அடுத்த சின்ன கலக்கிரி கிராமத்தில் ஓம் சக்தி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடி அமாவாசையன்று கூழ்வார்க்கும் திருவிழா, அம்மன் பிறந்த நாள் விழா நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று திருவிழா, அம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 350க்கும் ேமற்பட்ட பக்தர்கள் கோயிலில் சுவாமிக்கு வேண்டுதலுக்கு ஏற்ப நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சுவாமிகள் முன் செல்ல பெண்கள் தலைமையில் கூழ் சுமர்ந்து ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொப்பரையில் ஊற்றினர்.
அப்போது 60க்கும் மேற்பட்டோர் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர். இதுகுறித்து ஆந்திர மாநில ஓம்சக்தி கோயில் மாநில தலைவர் சரிதா கூறுகையில், ஆண்டு தோறும் ஓம் சக்தி கோயிலில் அம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்காக கோயில் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது. விழாவில் சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்’ என கூறினார்.