Friday, June 13, 2025
Home ஆன்மிகம் அற்புதம் நிறைந்த ஆதிகாமாட்சி அம்மன்

அற்புதம் நிறைந்த ஆதிகாமாட்சி அம்மன்

by Nithya

‘‘தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவந்தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கெ
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே’’

தேவியின் இடுப்பு எலும்பு வீழ்ந்த இடம்

“அரிதரிது மானிடராயப் பிறத்தல் அரிது’’ என ஒளவை சொற்படி மானிடராய்ப் பிறந்தும் இறைத் தன்மையை நாடி மீண்டும் பிறவாப் பேரின்பம் அடைய வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பம். இறைத் தன்மையை முற்றும் பெற பாரததேசம் பல திருத்தலங்களைக் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், தென்தமிழ்நாட்டிலே எண்ணிலடங்காத் தலங்களைக் கொண்டு இறையருளை எளிதாகப் பெற வாய்ப்புள்ளது. அதனினும், நகரேஷு காஞ்சி எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளதும். முக்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சி எனப்போற்றப் பெற்றதும் தொண்டை நன் நாட்டின் திலகமாகத் திகழ்வதும் ஆகிய காஞ்சி மாநகரில் திருவேகம்பத்துக்கும் காமக்கோட்டத்துக்கும், குமர கோட்டத்துக்கும் இடையே காளிக்கோட்டம் என இத்திருக்கோயிலில் ஆதிகாமாக்ஷி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகின்றாள்.

அறுவகைச் சமயங்களுள் சக்தி வழிபாட்டினை முதன்மையாகக் கொண்டது சாக்தம் ஆகும். தேவியின் திருக்கருணை, 18 பீடங்கள் 51 பீடங்கள் 64 பீடங்கள் மற்றும் 108 பீடங்கள் எனப் பலநிலைகளில் விளங்குகின்றது. எல்லாவற்றிலும் இடம் பெறுவது காஞ்சிபுரம் ஆகும். தக்கயாகத்தின் முடிவில் தாக்ஷாயணி தன் உடலைச் சிதைத்துக் கொண்டபோது, தேவியின் இடுப்பு எலும்பு வீழ்ந்த இடமாக காஞ்சிபுரம் அமைந்து காமகோடிபீடம் என ஆகியது. ஒட்டியாண பீடம் என்றும் வழங்கப்படுகிறது. மற்றும் 51 அக்ஷரங்களில் `ஐ’ கார பீடமாக விளங்குவது இந்த ஆதிபீடம். ஆதிகாமாட்சி ஏன் காளியாக இத்தலத்தில் அருள் பாலிக்கின்றாள்? விடையாக காஞ்சிப் புராணத்தை ஆய்ந்தால் விரிவான காரணம் புலப்படும்.

உமா தேவி, காளியானாள்

கயிலையங்கிரியில் ஒருமுறை இறைவனும் இறைவியும் மிக மகிழ்ச்சியோடு இருக்கும்போது, அம்மை விளையாட்டாக அப்பன் கண்களை கணப்பொழுது தன் கரங்களால் பொத்தினாள். சிவபெருமானின் இரு கண்களும் சூரியன் – சந்திரர் ஆவர். அவற்றின் ஒளி, அன்னையின் திருக்கரங்களால் மறைக்கப்பட்டு விட்டதால், சகல உலகங்களும் இருட்டில் ஸ்தம்பித்து நின்றன. சிருஷ்டித் தொழில் அடியோடு நின்று சகல உலகங்களிலும் தர்மநெறி அழிந்தது! வாழும் ஜீவராசிகளிடம் பாவம் பெருகி, அது கருமை நிறமாக மாறியது. அக்கருமை நிறம் உமாதேவியின் சரீரத்தில் படிந்துபொன்மயமான அவள் வடிவத்தை கருமையாக்கிவிட்டது! இதைக் கண்ட தேவர்கள், பெருந்தீவினை நேரப் போகிறதென்று அச்சமடைந்து பெரிதாக ஓலமிட்டனர். இதனால் திடுக்குற்ற உமாதேவி, சிவனின் கண்களைப் பொத்தியிருந்த தன் கரங்களை விலக்கிக் கொண்டாள். உடனே, உலகம் முன்புபோல் ஒளிபெற்று இயங்கத் தொடங்கியது.

தன் தவறுக்கு இறைவனிடம் உமா மன்னிப்பு கேட்டதுடன், தன் சரீரம் திடீரென்று கருமை அடைந்ததைக் கண்டு மனவருத்தம் அடைந்தாள். அதன் காரணமறிய பரமேஸ்வரனைத் துதித்த உமாதேவி, ஈசனே! தங்கம் போல் ஜொலித்த என் உடல் இப்படிக் கருப்பு நிறமாகிவிட்டதே… என்ன காரணம்? என்று வினவினாள். அதற்கு ஈஸ்வரன் தேவி இது கருப்பு நிறமல்ல உலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தினுடைய பாபத்தின் வடிவமே ஆகும். கருமையான உன்னை இனி “காளி’’ என்று அழைப்பர் என்று பதில் அளித்தார். இதனால் நடுக்கமுற்ற உமாதேவி ஐயனே! இந்த கருமை நிறத்திலிருந்து விடுதலை அடைய நான் என்ன பிராயச்சித்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கேட்டாள். சங்கரனும் பரிகார விதிகளை விவரித்தார்.

கௌரியாக உருவெடுத்தாள்

அதன்படி, உமையவள் தன் கணவரை வணங்கி விடைபெற்று, பத்ரிகாஸ்ரமத்தில் கா(ர்)த்தியாயன முனிவருடைய குழந்தையாக அவதரித்தாள். தக்க வயது வந்தவுடன் அவரிடமிருந்து யோகதண்டம், ஜபமாலை, குடை, புத்தகம், கங்கை மணல், கங்கா தீர்த்தம், தீபஸ்தம்பம், வித்யாதரம், வியாக்ராசனம், இரண்டு சாமரை, இரண்டு குடம், விசிறி, வறுத்த பயிறு முதலியவற்றைப் பெற்று காசியம்பதியை அடைந்தாள். அங்கு கோரமாகத் தலைவிரித்தாடிய பஞ்சப்பேயை விரட்டியடித்து அன்னபூரணி எனும் திருநாமம் பெற்று. காசிராஜனுக்கு முக்தியையும் அளித்தாள். இதன்பின் தென்னாடு வந்து ஓர் இடத்தில் தங்கியபோது அவளிடமிருந்த யோகதண்டம் முதலிய பொருள்கள் ஈசன் கூறியபடி மாறியது கண்டு அந்த இடமே காஞ்சி மாநகரம் என்றறிந்தாள்.

காஞ்சிக்கு வந்த இறைவி அங்கு கம்பா நதிக்கரையில் மாவடியில் மணலால் ஒரு அழகிய லிங்கம் உருவாக்கி ஏகாம்பரநாதனை வழிபட்டு வந்தாள். அவளது பக்தியைச் சோதிக்க இறைவன், கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். அதனால் தனது பிருத்வி (மணல்) லிங்கத்துக்கு என்ன தீங்கு நேருமோ என்று கவலையுற்று, உமையவள் தன் முழந்தாள் ஊன்றி, இரு கரங்களாலும் லிங்கத்தை மார்போடு சேர்த்துத் தழுவிக் கொண்டாள்.

அப்போது உமாதேவியின் வளைத் தழும்பும், முலைச்சுவடும் எம்பிரான் திருமேனியில் அழுந்தின. தன் சோதித்திருவைக் குழைந்து காட்டி அவளுக்குக் காட்சி அளித்து, “காளி! நீயும் நானும் வேறல்லோம். கருமையால் காளி என்ற பெயர் அடைந்த நீ, உனது உக்ர சக்தியால் சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன், மகிஷன் எனும் அரக்கர் கூட்டத்தையே வேரோடு ஒழித்ததைக் கண்டு என் உள்ளம் உவகை அடைகிறது. விரும்புவதைக் கேள்!’’ என்றார். தேவி மகிழ்வுடன் அவரைப் பன்முறை வணங்கி, “பரமேஸ்வரா! முன்பே மந்தார மலையில் காளி; என்று அழைத்தருளினீர். இனி இக்கரிய நிறத்தை மாற்றி தங்க நிறத்தை எனக்கு அருள வேண்டும்.’’ என்று பிரார்த்தித்தாள்.

“அம்மையே நீ கருமைநிறக் காளியானதால்தான் உலகம் நன்மை அடைந்தது. அசுரர்கள் அழிக்கப்பட்டனர். உன்விருப்பப்படி திருமேனி மீண்டும் பொன்னிறம் பெற்றுவிடும். பாம்பு தனது சட்டையை உரிப்பது போல் உன் கருநிறத்தை விட்டு கௌர (பொன்) நிறம் அடைந்து, இனி நீ “கௌரி’’ என்று அழைக்கப்படுவாய்’’ என்றார் இறைவன். உடனே அம்பாள் தன் கரிய நிறத்தை ஓர் உடைபோல் கழற்றி எறிய, அது ஒரு தேவி ரூபமாக வடிவெடுத்து, “கௌசிகி’’ என்று பெயரடைந்தது. இத்தேவி வழிபட்ட கௌசிகீஸ்வரர் லிங்கத் திருமேனியை இன்றும் காஞ்சியில் தரிசிக்கலாம். திருமேனி பொன்னிறம் அடைந்தவுடன் தேவி, கௌரி என்ற திருநாமம் ஏற்று இறைவனின் திருவுளப்படி பங்குனி உத்திர நன்நாளில் ஈசனை மணந்தாள்.

அட்சயபாத்திரம்

காஞ்சியில் தரிசனம் தரும் ஸ்ரீ ஆதிபீடா பரமேஸ்வரியாக விளங்கும் ஸ்ரீகாளிகாம்பாள், சிறிய கோரப் பற்கள், சாந்தம் தவழும் முகம் என்று பத்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாகக் காட்சி அளிக்கிறாள். அவள் வதனத்தில் அன்னையின் பரிவைக் காண்கிறோம். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு காமாட்சியாகவே தரிசனம் கொடுத்தாலும், இந்த ஆதிகாமாட்சிக்கு ஜடாமுடியும், அதில் பிறை, கபாலம், பாம்பு, முதலியவையும் தென்படுகின்றன. சதுர்புஜங்கள் கொண்ட இக்காளியின் இடது வலது மேற்கரங்களில் முறையே பாசமும், அங்குசமும், அதே மாதிரி வலது இடது கீழ்க்கரங்களில் முறையே அபயமுத்திரையையும். அட்சய பாத்திரத்தையும் காண்கிறோம். சிலர் இந்த அட்சய பாத்திரத்தை கபால ஒடு என்று கூறுகிறார்கள், தவறு.
முக்கண்ணியான இந்த அம்மனின் பீடத்தின்கீழ் மூன்று அரக்கர்களின் சிரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் காளி அம்மன் அமர்ந்த கோலத்தில் இருந்தாலும், உற்சவமூர்த்தி நின்ற கோலத்தில் உள்ளது. இவளது இரு மருங்கிலும் லட்சுமி, சரஸ்வதி நின்றபடி சாமரம் வீசுகிறார்கள். தெற்குநோக்கிய இந்த விக்கிரகங்கள் பஞ்சலோகத்தால் வடிக்கப்பட்டவை.

கிரக தோஷங்கள் விலக

இக்கோயிலில் ஓர் அபூர்வ லிங்கம் தென்படுகிறது. இந்த லிங்கத் திருமேனியில் டமரு, கட்கம், கபாலம், சூலம் ஏந்திய சக்தி அம்மன், வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். இதைச் சக்திலிங்கம் என்று அழைக்கிறார்கள். உள்சுற்றில் அன்னபூரணி, கமடேஸ்வரர், பின்புறம் உள்ள அரசு – வேம்பு கொண்ட மேடையில் சாஸ்தா, நாகர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். கிழக்குச் சுவரில் ஒரு மாடத்தில் பல்லவ காலப்புடைச் சிற்பமாகத் தென்படும் காளி, பத்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள். விரிசடை, பிறைச் சந்திரன், பாசாங்குசம், அட்சய பாத்திரம் கொண்ட முக்கண்ணியான இத்தேவியின் ஒரு செவியில் நாககுண்டலமும். மற்றொன்றில் குழையும் அணிந்துள்ளதைக் காண்கிறோம். இவளது பீடத்தின்கீழ் அசுரர்களின் சிரங்கள் இல்லை. ஆதி காமாட்சி அம்மனை வணங்கினால், மன சங்கடத்தை பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

பிரதி திங்கட்கிழமை. மற்றும் வெள்ளிக் கிழமைகளில், நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், கருத்து வேறுபாடுகள் விலகியும், கிரக தோஷங்கள் விலகியும் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பேறு உண்டாகும். மேலும், தங்கம் வெள்ளியில் விராலி மஞ்சள் வைத்து அம்மனுக்கு பொட்டு சாத்தி சங்கல்பம் செய்தால், ராகு காலத்தில் 3-மணியிலிருந்து 4-1/2-மணிக்குள் மந்திர தோஷங்கள் விலகும். ஞாயிற்றுக் கிழமைகளில் 4-மணி முதல் 6-வரை நேரங்களில் அம்மனை வழிபட்டால், மன ரீதியான பிரச்னைகளை விலக, தட்சயினியாக காட்சி அளித்து துர் சக்திகளை விலக்கி வாழ்வில் வெற்றி பெறலாம். செல்வங்கள் நிறைந்து நிறைவான வாழ, ஆதிகாமாட்சி, ஆதிபரமேஸ்வரி காளிகாம்பாள் காண காஞ்சிக்கு வாருங்கள்…!

ஆர்.சுதாகேசவன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi