மும்பை : அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சில மணி நேரத்தில் ரூ.35,600 கோடி சரிந்துள்ளது. மோடியின் நண்பர் என்று காங்கிரசால் கூறப்படும் கவுதம் அதானி, தன்னுடைய நிறுவனங்களில் சந்தை மதிப்பை போலியான நிறுவனங்களை பல மடங்கு உயர்த்தி கொண்டார் என்பது குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிதி ஆய்வு நிறுவனம், கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை நாடு முழுவதும் புயலை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டால் இந்திய பங்குச்சந்தை மிக சரிவை சந்தித்தது. எனவே ஹிண்டன்பர்க் முன்வைத்த புகார் பற்றி விசாரிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியை உச்சநீதிமன்றம் பணித்தது.
இந்த நிலையில், அதானி குழும நிறுவன பங்குகளில் முறைகேடாக குடும்பத்தினரே முதலீடு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதானி குழுமம் மீது ஓசிசிஆர்பி என்ற தனியார் ஆய்வு நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதன் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சில மணி நேரத்தில் ரூ.35,600 கோடி சரிந்துள்ளது. நேற்று ரூ.10 லட்சத்திற்கு 84 ஆயிரத்து 668.73 கோடியாக இருந்த அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10,49,044.72 கோடியாக சரிந்தது. அதானி என்டர்பிரைஸஸ் விலை 2%மும், அதானி க்ரீன் எனர்ஜி பங்கு விலை 3%மும்,ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் பங்குகள் விலை தலா 2.4%மும் சரிந்துள்ளது.அதானி பவர் பங்கு விலை 2.6%மும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 1.9%மும்,அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் வில்மர் பங்குகள் விலை தலா 1.8%மும் வீழ்ச்சி கண்டுள்ளது.