மும்பை : அதானி நிறுவனத்துடன் போட்டியிடும் நிறுவனங்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி ஒன்றிய அரசு அச்சுறுத்தி வருவதாக காங்கிரஸ் சாடி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி குழும நிறுவனங்களுடன் போட்டியில் ஈடுபடும் நிறுவனங்களை குறிவைத்து சிபிஐ, அமலாக்கத்துறை வருமான வரித்துறை ஆகிய புலனாய்வு அமைப்பு விசாரணையும் சோதனையும் நடத்துவது அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் மூலமாக அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட ஏலத்தில் பங்கெடுக்க முடியாமல் போகிறது என்றும் அதனால் அனைத்து முக்கிய ஒப்பந்தங்களும் அதானி குழும நிறுவனங்களுக்கே செல்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சாங்கி நிறுவனத்தை வாங்க முயன்ற ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தின் மீது அண்மையில் ஒன்றிய அமைப்புகளின் சோதனை நடைபெற்றதாகவும் அதைத் தொடர்ந்து சாங்கி நிறுவனத்தை அதானி குழுமத்தைச் சேர்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ் கையகப்படுத்தியுள்ளது என்றும் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில 3வது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ சிமெண்ட் சாங்கி நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த ஏப்ரலில் தகவல் வெளியானது. இதையடுத்து ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சார்பில் கடந்த ஜூனில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் சாங்கி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக ஸ்ரீ சிமெண்ட் கடந்த மாதம் அறிவித்த நிலையில், கடந்த 3ம் தேதி அதானி குழுமனத்தின் அம்புஜா சிமெண்ட் சாங்கி நிறுவனத்தை கையகப்படுத்தியது.