டெல்லி: ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து அரசின் ஆலோசனை பெற்று தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக ஜெயராம் பணியாற்றி வந்தார். இவர் தனது தோழியான மகேஸ்வரியின் வேண்டுகோளுக்கு இணங்க காதல் விவகாரத்தில் தலையிட்டு வாலிபரை கடத்த தனது வாகனத்தை வழங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வாலிபரின் தாய் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, கூடுதல் டிஜிபி ஜெயராம் காரில் வாலிபரை இறக்கி விட்டது உறுதியானது.
அதேநேரம் இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தல், குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதியானதால், கூடுதல் டிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திருவாலங்காடு போலீசார் கூடுதல் டிஜிபி ஜெயராமனை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து கடத்தல் விவகாரம் தொடர்பாக கூடுதல் டிஜிபி ஜெயராமனிடம் விசாரணை நடத்தினர்.
கடத்தல் வழக்கில் கைது உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை ஏற்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் அமர்வு, இன்று விசாரித்தது. அப்போது ஜெயராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; விசாரணைக்கு ஒத்துழைப்பால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது” என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மூத்த காவல்துறை அதிகாரியான ஜெயராம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்படவில்லை. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் திரும்பப் பெறப்படுமா என்பது குறித்து பதில் அளிக்க அவகாசம் தேவை என தெரிவித்தார். பணியிடை நீக்க உத்தரவை ரத்துசெய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை நாளை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.