டெல்லி: சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை என்றும் ஏடிஜிபி ஜெயராம் மீதான ஆள் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் உள்ள 17 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவன் ஏ.டி.ஜி.பி ஜெயராமின் காரில் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏ.டி.ஜி.பி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து ஏ.டி.ஜி.பி ஜெயராமன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏ.டி.ஜி.பி ஜெயராமன் மூத்த அதிகாரி என்பதற்காக சலுகை வழங்க முடியாது. இருப்பினும் அவரது பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியுமா?. இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக உரிய விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும், “என்று தெரிவித்தனர்.
மேற்கண்ட மனு இன்று மீண்டும் நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால், பணியிடை நீக்கம் என்பது தொடர வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது. மேலும் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பதற்கான ஆவணங்களையும் தமிழக அரசு தாக்கல் செய்தது. அப்போது நீதிபதிகள், ஜெயராம் மீதான ஆள் கடத்தல் வழக்கை வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு, “சஸ்பென்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான ஆள் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும். ஆனால், சில உத்தரவுகளை பிறப்பித்து இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டாயப்படுவது போல உள்ளது. எந்தெந்த வழக்குகள் என்பதைக் கூற விரும்பவில்லை,”எனத் தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள், “ஏடிஜிபியை பணியிடை நீக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்தால் அதில் தலையிட முடியாது. ஆனால், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்.ஏடிஜிபி ஜெயராம் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிடுகிறோம். “இவ்வாறு உத்தரவிட்டனர்.