மதுரை: மதுரை ஆதீன நியமன விவகாரம் தொடர்பான வழக்கை சார்பு நீதிமன்றம் விசாரிக்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தா சார்பில் அவரது பவர் ஏஜென்டான மெக்சிகோவை சேர்ந்த நரேந்திரன் (எ) ஸ்ரீநித்ய மோக்சப்ரியானந்தா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீன மடத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர், தகுதி மற்றும் சமய புலமை காரணமாக 293வது ஆதீனமாக நித்யானந்தாவை கடந்த 27.4.2012ல் நியமித்தார். இதன்படி நித்யானந்தா மதுரை ஆதீன மட பணிகளை மேற்கொண்டார். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன்கருதி பல்வேறு நற்பணிகளையும் செய்தார். இந்நிலையில் திடீரென 21.10.2012ல் வெளியிட்ட அறிவிப்பில், 293வது ஆதீனமாக நித்யானந்தாவின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தார். ஆதீன மரபுப்படிதான் நியமனம் நடந்தது. ஆச்சார்ய அபிஷேகம் எனும் மரபுப்படி நித்யானந்தாவை அருணகிரி நாதர் நியமித்தார். தனது நியமனத்தை ரத்து செய்ததை எதிர்த்து நித்யானந்தா, மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே நித்யானந்தாவை நீக்கம் செய்த தனது அறிவிப்பை அங்கீகரிக்கக் கோரி ஆதீனம் அருணகிரி நாதர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரு மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2021ல் 292வது ஆதீனம் அருணகிரி நாதர் காலமானார். இதையடுத்து 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் அறிவிக்கப்பட்டார். அவர், அருணகிரி நாதர் தொடர்ந்த வழக்கை தற்போதைய ஆதீனம் என்ற அடிப்படையில் தன்னை இணைத்து நடத்தக் கோரி மதுரை நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் நியமிக்கப்பட்டதை அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. 293வது ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் நியமனத்தை அங்கீகரித்த மதுரை நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பிரதான சிவில் வழக்கு விசாரணை தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், ‘‘தற்போது 293வது ஆதீனமாக அறிவிக்கப்பட்டவர் மடத்தின் பணிகளுக்கு துணையாக இருந்தவர் தான். இவர் முறைப்படி 292வது ஆதீனத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல. நித்யானந்தா தான் முறைப்படி நியமனம் பெற்றவர். அதுவும் ஆச்சார்ய அபிஷேகம் செய்யப்பட்டவரை மரபுப்படி நீக்கவோ, திரும்ப பெறவோ முடியாது. நீக்கம் செய்ததற்கு முறையான ஆவணங்கள் எதுவும் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதை கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி கே.முரளிசங்கர், ‘‘நித்யானந்தாவின் பவர் ஏஜென்ட்டாக மனுதாரரின் நியமனம் இன்னும் அமலில் உள்ளதா என்பது குறித்து நித்யானந்தா தரப்பில் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதே நேரம் சம்பந்தப்பட்ட பிரதான வழக்கின் மேல் விசாரணையை மதுரை முதன்மை சார்பு நீதிமன்றம் மேற்கொள்ளக் கூடாது’’ என உத்தரவிட்டு, விசாரணையை நவ. 29க்கு தள்ளி வைத்தார்.