Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

விளிம்புநிலை சமூக இளைஞர்களின் கல்விக்கு தடையாக இருக்கும் இரு பிரச்னையை சரிசெய்யவும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: விளிம்புநிலை சமூக இளைஞர்களின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு, மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரதமர் மோடி அவர்களே! விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக உள்ள இரண்டு முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதலாவதாக, தலித், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில், பீகாரில் உள்ள தர்பங்கா அம்பேத்கர் விடுதிக்கு நான் சென்றபோது, அங்குள்ள மாணவர்கள், 6 முதல் 7 பேர் ஒரே அறையில் தங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சுகாதாரமற்ற கழிப்பறைகள், பாதுகாப்பற்ற குடிநீர், உணவக வசதி இல்லாமை, நூலகம் மற்றும் இணைய வசதி இல்லாதது போன்ற குறைகளை மாணவர்கள் கூறினர். இரண்டாவதாக, விளிம்புநிலை சமூக மாணவர்களுக்கான மேல்நிலைக் கல்விக்குப் பிந்தைய (போஸ்ட்-மெட்ரிக்) கல்வி உதவித்தொகை வழங்குவதில் உள்ள தாமதங்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரில், கல்வி உதவித்தொகைக்கான இணையதளம் மூன்று ஆண்டுகளாகச் செயல்படவில்லை. இதனால், 2021-22ம் ஆண்டில் எந்த மாணவருக்கும் உதவித்தொகை கிடைக்கவில்லை. கல்வி உதவித்தொகை பெறும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை, 2023ம் நிதியாண்டில் 1.36 லட்சமாக இருந்தது; அதே 2024ம் நிதியாண்டில் 0.69 லட்சமாகக் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.

பீகாரில் இருந்து சில உதாரணங்களைக் குறிப்பிட்டிருந்தாலும், இதன் தாக்கம் நாடு முழுவதும் பரவலாக உள்ளன. எனவே தலித், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான அனைத்து விடுதிகளையும் தணிக்கை செய்து, அங்கு சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், உணவு மற்றும் கல்வி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்யப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னேறாமல், இந்தியா முன்னேற முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.