திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக வரும் 25ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது. இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.