விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் வருவாய்த்துறை அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ, அவரது மகன் கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மொத்தம் சேர்க்கப்பட்ட 67 சாட்சிகளில் 51 பேரிடம் விசாரணை முடிவடைந்துள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதி மணிமொழி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். பொன்முடி, கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. தொடர்ந்து, அரசு தரப்பில் 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், மேலும் கூடுதலாக 4 பேரை இவ்வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். இதனைதொடர்ந்து வழக்கை நீதிபதி வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.