சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின் நிறுவ டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் சட்டபேரவையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து 500க்கும் மேற்பட் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலும், டாஸ்மாக் பணியாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டு அதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கடைகளில் மின்னணு பண பரிமாற்ற கருவிகள் உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளிலும் ஸ்வைப்பிங் மெஷின்கள் நிறுவ வங்கிகளுக்கு அழைப்பு விடுத்து ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த புள்ளியில் பங்கேற்கும் வங்கிகளை தேர்வு செய்து பிறகு அனைத்து கடைகளிலும் ஸ்வைபிங் மெஷின்கள் அமைக்கப்படும். இந்த மெஷின்கள் முலம் செய்யப்படும் பண பரிவர்த்தனை தகவல்கள் அனைத்தும் டாஸ்மாக் நிர்வாகம் சரிபார்க்கும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.