*ஆட்சியர், எம்எல்ஏ துவக்கி வைத்தனர்
விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஒப்பனை அறைகள் கட்டிடம் கட்டும் பணிக்கு தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி வைத்ததை தொடர்ந்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறுகையில்,தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உயர்கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
இதுமட்டுமல்லாமல், அனைத்து அரசு கலைக்கல்லூரிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.
அதனடிப்படையில் தற்போது முதலமைச்சர், தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக, பல்வேறு மாவட்டங்களில் உயர்கல்வித்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வக கட்டிடங்கள், பணிமனைகள், விடுதி கட்டிடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து, 207 கோடி 82 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள், 3 ஆய்வகம் மற்றும் ஒப்பனை அறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில் 1,634.50 ச.மீ. பரப்பளவில் உட்கட்டமைப்பு வசதிகளாக தரைத்தளத்தில், 2 ஆய்வகங்கள், 1 மாணவர் ஒப்பனை அறை, 1 மாணவியர் ஒப்பனை அறையும், முதல் தளத்தில், 2 வகுப்பறைகள், 1 ஆய்வகம், 1 மாணவர் ஒப்பனை அறை, 1 மாணவியர் ஒப்பனை அறையும், இரண்டாம் தளத்தில், 4 வகுப்பறைகள் மற்றும் 1 மாணவியர் ஒப்பனை அறை ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், விழுப்புரம், டாக்டர் எம்.ஜி.ஆர் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில், 863.80 ச.மீ. பரப்பளவில் உட்கட்டமைப்பு வசதிகளாக தரைத்தளத்தில், 2 வகுப்பறைகள், 1 மாணவியர் ஒப்பனை அறையும், முதல் தளத்தில், 2 வகுப்பறைகள், 1 மாணவியர் ஒப்பனை அறையும், இரண்டாம் தளத்தில் 2 வகுப்பறைகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, முதல்வர் சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ்பாபு, உதவி பொறியாளர் மதுரைவீரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.