சென்னை: ஐ.நா போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் 17 பேரில் ஒரு நபர் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மதுபானம், கஞ்சா, ஹெராயின், ஓபியம் உள்ளிட்ட போதை பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு என்பது தனி மனிதனின் ஆரோக்கியத்திற்கும், மனநலம், குடும்ப நலத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது. தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுப்பதில் மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அத்துடன் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்க அரியலூர், தருமபுரி, ஈரோடு, திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் ரூ.15.81 கோடி செலவில் “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் 25 இடங்களில் அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு மையத்திற்கும் மனநல மருத்துவர் தலைமையில், ஆற்றுப்படுத்துநர், சமூக பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், தூய்மை பணியாளர் என 6 மனநல மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவச் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் இதுவரை புறநோயாளிகள் 17,459 பேரும் உள் நோயாளிகளாக 1421 பேர் இந்த மையம் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ் கூறுகையில் ‘‘ஒரு மையத்திற்கு 20 படுக்கைவீதம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தயார் நிலையில் வைத்துள்ளோம். வரும் காலங்களில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இது போன்ற மையங்களை அமைக்க கோரிக்கை முன்வைத்துள்ளோம். இத்திட்டத்திற்காக 25 அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக மருத்துவ குழுவை அமைத்து அதன் மூலம் தகுந்த சிகிச்சைகளை அளித்து வருகிறோம்’’ என்றார்.
இத்திட்டத்தின் கண்காணிப்பாளர் கார்த்திக் தெய்வ விநாயகம் கூறுகையில், ‘‘இந்த மையங்கள் மருத்துவகல்லூரிகளுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளதால் அவசர மருத்துவ சேவையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. கலங்கரை மையம் எனும் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையங்கள், 25 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது.
போதை மீட்பு சிகிச்சைக்காக வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, சேவைகள் பற்றிய தகவல் வழங்குதல், சமூக-உளவியல் மதிப்பாய்வு, மனநல மருத்துவரின் சிறப்பு ஆலோசனை, மனநல செவிலியர் சேவை, போதை பயன்பாட்டிற்கு இட்டுச்செல்லும் அன்றாட வாழ்வியல் சூழல்கள், நெருக்கடிகள் அதில் இருந்து மீண்டு வருவது பற்றி சக பயனாளிகளுடனான குழு கலந்துரையாடல், குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகள் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
கூடுதலாக, போதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உடனடி அவசர மருத்துவ சிகிச்சையும், சி.டி, எக்ஸ்ரே மற்றும் ஆய்வக பரிசோதனைகள், இணை நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை ஆகிய சிகிச்சைகளும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிறது. இச்சேவைகள் அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு தத்தளிப்பவர்கள், மீண்டு வர கலங்கரை மையத்தை அணுகி பயன்பெற வேண்டும்,’’ என்றார்.
இந்த மையத்தில் சிகிச்சை பெற்ற ஒருவர் கூறியதாவது:
என்னுடைய பெயர் ருத்ரா கோட்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 15 வருடங்களாக குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். இதனால் குடும்பத்திடன் அன்பு செலுத்த முடியவில்லை, சமூகத்தில் மற்றும் உறவினர்களிடம் மரியாதை இல்லை, பணி முறையாக செய்ய முடியவில்லை, குறிப்பாக பசி எடுக்கவில்லை. இதனால் உடலில் பல்வேறு வியாதி வர தொடங்கியது. இந்த குடி பழக்கத்தை நிறுத்த வேண்டும் என முடிவு எடுத்து இந்த போதை மீட்பு மையத்திற்கு வந்தேன். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை எடுத்து கொண்டு இருக்கிறேன். தற்போது குடி பழக்கத்தை முழுமையாக விட முடியும் என நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. இந்த மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் அனைவரும் அன்பாகவும், பண்பாகவும் இருக்கிறார்கள். முழுமையாக சிகிச்சை முடிந்து வெளியில் செல்லும் போது சமூதாயத்தில் மரியாதை உடன் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் 5 மையம்
சென்னையில் இந்த ‘கலங்கரை’ 5 இடங்களில் உள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு மன நல மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
போதை பழக்கம் மற்றும் மனநோயால் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு முதலில் இணை நோய் இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சைகளை தகுந்த அடிப்படையில் அளிக்கப்பட்டு, அதன்பின்னர் கலங்கரை மையத்தில் சேர்க்கப்பட்டு முழுமையாக உடல் தேறிய பிறகு அவர்களை வீடுகளுக்கு அனுப்புவோம். இதில், வேலையில்லாமல் இருக்கும் சிலருக்கு மருத்துவமனைகளிலேயே பாதுகாவலர், வார்டு அட்டண்டர் போன்ற பணிகளில் அவர்களை நியமித்திருப்பதாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவ சபிதா கூறினார்.
நட்புடன் உங்களோடு மனநல சேவை
தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் போதை மீட்பு சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆற்றுப்படுத்துதல் சேவைகளை பெற நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மனநல சேவையை 14416 அல்லது 104 ஆகிய எண்களை மூலம் பெறலாம்.