சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: ஹிண்டன்பார்க் அறிக்கை முதல் சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்த ஊழல் மீதான நியூயார்க் நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்திய பொருளாதாரத்தில் விபரீதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு விசாரணை குழுவுக்கு நரேந்திர மோடி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தான் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்தச் சூழலில் அதானி குழுமத்திற்கு நெருக்கமான பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை தொடுக்க வேண்டிய பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வதந்திகளை செய்தியாக்கும் நோக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி அறிக்கை விடுத்தார்.
ராமதாஸ் தலைமை அமைச்சர் மீது ஏன் குற்றச்சாட்டு முன்வைக்க வில்லை? திமுக மீதும், தமிழக அரசு மீதும் புழுதி வாரித் தூற்றும் நோக்கத்தோடு அறிக்கை கொடுத்தார். பொறுப்பற்ற பொய் வதந்திகளுக்கு எல்லாம் முதல்வர் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியான பதிலை ஒரு வரியில் சொல்லிவிட்டார். இந்தப் பிரச்சனையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டு வைக்க பாமக தயாரா?. பாஜவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பிரச்சனையை திசை திருப்ப பாமக தலைவர் முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி எல்லாம் பயனற்று போகும்.