டெல்லி: மின் உற்பத்தி துறையில் அதானி குழுமத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஆஸி.யில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து ஜார்க்கண்டில் மின் உற்பத்தி செய்து வங்கதேசத்துக்கு அதானி குழுமம் விற்கிறது. இந்தியாவில் தற்போது மின்சாரத்தை விநியோகிக்கவும் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனக்கு நெருக்கமானோருக்கு சலுகை வழங்குவதில் பிரதமர் மோடி மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்.
அதானி குழும நிறுவனத்துக்காக இந்தியாவின் ஏற்றுமதிக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி விதிகள் திருத்தத்தால் அதானி குழுமம் வங்கதேசத்துக்கு பதில் இந்தியாவிலேயே மின்சாரம் விற்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு மின்சாரம் விற்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்து விநியோகித்து வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு மின்சாரம் விற்பதில் சிக்கல் ஏற்பட்டது. வங்கதேசத்துக்கு அதானி குழுமம் மின்சாரம் விற்க முடியாததால் இந்தியாவிலேயே விற்கும் வகையில் மோடி அரசு சலுகை வழங்கியுள்ளது.
2018-ம் ஆண்டின் மின் உற்பத்தி சார்ந்த ஏற்றுமதி விதிகளில் ஒன்றிய மின்துறை அமைச்சகம் ஆக.12-ல் திருத்தம் செய்தது. ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் உள்ள அனல் மின்நிலையத்தில் அதானி நிறுவனம் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்து வருகிறது. ஜார்க்கண்டில் உற்பத்தி செய்யும் 1,600 மெகாவாட் மின்சாரத்தையும் அண்டைநாடான வங்கதேசத்துக்கு அதானி குழுமம் விற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.