மும்பை: ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் கடந்த 2021ம் ஆண்டு ஆபாச படம் எடுத்து அதனை இணையதளம் மற்றும் தனியார் செயலி நிறுவனத்துக்கு விற்று பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து 2021ம் ஆண்டு ஜூலையில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். பின்னர் ராஜ் குந்த்ரா ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்குந்த்ரா மீது மேலும் ஒரு பணமோசடி வழக்கு பதியப்பட்டது. அதன்படி ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருந்த ரூ.98 கோடி கிரிப்டோ கரன்சியை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் மும்பை மற்றும் உபி மாநிலத்தில் ராஜ்குந்த்ராவின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.