சென்னை: பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி கடந்த 3ம் தேதி சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து குறிப்பிட்டது சர்ச்சையானது. கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது எக்ஸ்தள பக்கத்தில் கஸ்தூரி நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2 நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. இன்று எனது தெலுங்கு சகோதரர் ஒருவர், எனது வார்த்தைகள் தமிழ்நாடு மற்றும் அதற்கு வெளியே உள்ள தெலுங்கு மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை எடுத்துக் கூறினார். தெலுங்கு மொழியுடன் எனக்கு தனிப்பட்ட தொடர்பு இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
தெலுங்கு திரையுலகில் எனக்கு கிடைத்த வரவேற்பை, மரியாதையை நான் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள்தான் எனக்கு பெயர், புகழ் மற்றும் ஒரு குடும்பத்தை கொடுத்தனர். நான் வெளிப்படுத்திய கருத்துகள், சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக, அதுவும் சூழல்நிலை சார்ந்தவைதானே தவிர, பொதுவான தெலுங்கு சமூகத்திற்கு எதிரானது அல்ல. தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கமில்லை. கவனக்குறைவான இந்த பேச்சால் மோசமான உணர்வு ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறேன். இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.