மும்பை: ‘எமர்ஜென்சி’ படம் வெளியாவதற்கு முன்பே நடிகையான பாஜக எம்பிக்கு கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில், அவர் 3 மாநில போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கங்கனாவுடன் நடிகர்கள் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘எமர்ஜென்சி’ படம் வெளியாவதற்கு முன்பே கங்கனாவுக்கு சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. நேற்று சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் பேசிய நபர், ‘எமர்ஜென்சி வெளியிட்டால், சீக்கியர்கள் உங்களை அறைந்து விடுவார்கள். எனது நாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது; நான் பெருமைமிக்க இந்தியனாக உள்ளேன். உங்களை மகாராஷ்டிராவில் எங்கு பார்த்தாலும், இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து செருப்பால் வரவேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவின் முடிவில் மற்றொருவர் பேசுகையில், ‘கடந்தகால வரலாற்றை மாற்ற முடியாது. எமர்ஜென்சி படத்தில் சீக்கியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருந்தால், அவர்களுக்கு (?) என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் யார் என்பதை மறந்துவிடாதீர்கள். எங்களை நோக்கிச் சொல்லும் விரலை, எப்படி உடைப்பது என்று எங்களுக்குத் தெரியும்’ என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள கங்கனா, அதனை இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் போலீசாருக்கு டேக் செய்துள்ளார். இந்த வீடியோ விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.