சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடிகை குஷ்பு நேற்று அளித்த பேட்டி:
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பில் இருந்த போது, கட்சி சார்பில் என்னால் எந்த பணியிலும் ஈடுபட முடியவில்லை. தற்போது அப்பதவியை ராஜினாமா செய்த பிறகு சுதந்திரமாக கட்சி பணிகளில் என்னால் ஈடுபட முடியும். ராஜினாமா செய்வதற்காக எனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ராஜினாமா குறித்து 6 மாதங்களுக்கு முன்பே நான் மேலிடத்தில் பேச ஆரம்பித்து விட்டேன்.
2026 சட்டப்பேரவை தேர்தலை மையமாக வைத்து, தனிப்பட்ட லாபத்துக்காக நான் ராஜினாமா செய்யவில்லை. கட்சிக்காக உழைக்க வேண்டும். நாட்டிற்காக உழைக்க வேண்டும் என தான் ராஜினாமா செய்திருக்கிறேன்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் என்ன நடக்கும் என்பது எனக்கே தெரியவில்லை. இதன் பிறகு எனது விளையாட்டு ஆரம்பமாக போகிறது. என் தம்பி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எடுத்த முடிவு சரியாகத்தான் இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
விஜய்யை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அதனை மேலிடம் முடிவு செய்யும். கட்சி சார்பாக பேசப் போகிறேன் என்ற பயம் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. என் பெயரை கேட்டாலே நடுங்குகிறார்கள். மடியில் கனம் இருந்தாதால்தான் பயம் இருக்கும். அந்த பயத்தில்தான் பேசி வருகிறார்கள். இனிமேல் தான் விளையாட்டை ஆரம்பிக்க போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.