Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடிகையின் உடல் எடை குறித்து யூடியூபர் கேட்டதற்கு நடிகர் சங்கம் கண்டனம்

சென்னை: நடிகை கௌரி கிஷன் - யூடியூபர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் "திரைத்துறையில் பெண் நுழைந்து சாதிப்பது சவாலானது. நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பது வருத்தமளிக்கிறது. யூடியூபர் நடிகையின் உடல் எடை குறித்து கேட்டதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘96’ படத்தின் ப்ளாஷ் பேக் போர்ஷனில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி கிஷன். அந்த படத்திற்கு முன்னும் பின்னும் அவர் படங்களில் நடித்திருந்தாலும் ‘96’ படம் அவருக்கு அடையாளமாக மாறி உள்ளது. இவரது நடிப்பில் உருவாகி உள்ள படமான ‘அதர்ஸ்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடல் மற்றும், செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைந்து தயாரித்துள்ளார். அபின் ஹரிஹரன் இயக்கியுள்ள திரைப்படம் "அதர்ஸ்". ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது.

அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது யூடியூபர் ஒருவர், ஏற்கனவே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தான் எழுப்பிய கேள்வியில் எந்த தவறும் இல்லை என்று வாதிட்டார். அதாவது, அவர் நாயகனை நோக்கி, ‘படத்தில் நடிகையைத் தூக்கி உள்ளீர்கள், நடிகையின் எடை எவ்வளவு’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கௌரி கிஷன் கண்டித்துப் பேச, அதை குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சியில் அந்த யூடியூபர் கேள்வி எழுப்பினார். அப்போது கவுரி கிஷன், ‘‘இது பாடி ஷேமிங் செய்வது போன்ற கேள்வியாகும். இந்த கேள்விக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். செய்தியாளர் சந்திப்பின்போது பாதியிலேயே வெளியேற நினைத்தேன் ஆனால் படத்திற்காக மௌனம் காத்தேன். என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஒரு நகைச்சுவையாக அதை கருதுமாறும் தெரிவித்தார்கள். பெண்கள் பாடி ஷேமிங் செய்யப்பட்டால் அதை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்க வேண்டும். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது யூடியூபர் நடிகையின் உடல் எடை குறித்து கேட்டதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள்.

நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத்தகாதது. தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர்.

ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றை சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கெளரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட.

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது. இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு youtube சேனலை ஆரம்பித்து பத்திரிக்கையாளர் ஆகிவிடலாம்.

திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாக பரப்பி பார்வையாளர்களை பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது. இந்த சூழலில் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிக்கை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம்.