பிரபல நடிகையிடம் நடிகர் அத்துமீறியதாக நடிகை ராதிகா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ராதிகா கூறியதாவது: பெரிய நடிகை ஒருவர், பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்தவர். அவர் என்னுடன் ஒரு படத்தில் நடிக்கும்போது, அப்பட நடிகர் குடித்துவிட்டு வந்து அந்த நடிகையிடம் அத்துமீறினார். அந்த நடிகை ஓடிவந்து என்னிடம் உதவி கேட்டார். நான்தான் உதவி செய்தேன். அந்த நடிகர் குடித்திருக்கிறார். அதனால் நீ எதுவும் பேசாதே என சொல்லிவிட்டு எனது கணவர் சரத்குமார் போய்விட்டார். அவர் போன பிறகு, அந்த நடிகரிடம் கடுமையாக சண்டை போட்டேன். அவரை கண்டபடி திட்டினேன். இதைப் பற்றி சில நடிகர்கள் மவுனம் காப்பது பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என சொன்னாலே அதுவே பெரிய விஷயம்தான். பல பெரிய நடிகைகளே இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றி நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தாலும் அவர்கள் வாய் திறப்பதில்லை. எனவே கேரளாவில் ஹேமா கமிட்டி போல், தமிழ் சினிமாவிலும் ஒரு நிபுணர் குழுவை அமைத்து பாலியல் புகார்களை விசாரிக்க வேண்டும் என நடிகர் சங்கத்திடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். கேரவனில் கேமரா வைத்து சிலர் பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பார்த்தது குறித்து நான் பேசியிருந்தேன். அதுபற்றி விசாரணை குழு என்னிடம் கேட்டார்கள். நான் விரிவாக அவர்களிடம் தகவல்கள் கூறியுள்ளேன். இவ்வாறு ராதிகா கூறினார்.