சென்னை: உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் சிங்கமுத்துவும் நானும் கடந்த 2000 முதல் இணைந்து நடித்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி படங்களாகும். இந்த நிலையில் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமை அடைந்த சிங்கமுத்து எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில் என்னை மிகவும் தரக்குறைவாக சிங்கமுத்து பேசியுள்ளார். இதனால், எனக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சிங்கமுத்து எனக்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு, நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.