சென்னை: மலையாளப் படவுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை ஒன்றை நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி வெளியிட்டது. திரைப்பட வாய்ப்பு பெறுவது தொடர்பாக பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, குடிபோதையில் சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து தொல்லை செய்வது உள்பட பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் இந்த அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாலியல் ரீதியான புகார்கள் குவிந்து வரும் நிலையில், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ என்ற அமைப்பின் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துவிட்டார். மேலும், 17 நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பானுப்பிரியாவின் தங்கையும், முன்னாள் ஹீரோயினுமான நடிகை நிஷாந்தி என்கிற சாந்திப்பிரியா, இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்திருக்கக்கூடாது. அவர் ராஜினாமா செய்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை. ‘உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். எங்களை நம்புங்கள். தயவுசெய்து உங்கள் குரலை உயர்த்தி எங்களிடம் பேச வாருங்கள்’ என்று அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருந்திருக்க வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறை. திரைத்துறையில் ஆண்கள் கூட துன்புறுத்தப்படுகின்றனர். பாலியல் துன்புறுத்தல் மலையாளப் படவுலகில் மட்டுமின்றி, அனைத்துப் படவுலகிலும் இருக்கிறது. 2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படவுலகில் இருந்து கூட யாராவது முன்வந்து இதுபோன்ற பிரச்னைகளை சொல்லலாம்’ என்றார்.