ஜபால்பூர்: பாலிவுட் நடிகர் சையிப் அலி கான். மத்தியப்பிரதேசத்தின் போபாலில் அவரது பட்டோடி குடும்பத்தின் மூதாதையர் சொத்துக்கள் ரூ.15ஆயிரம் கோடி மதிப்பில் உள்ளது. இவை நடிகர் சையிப் அலி கானின் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். போபால் சமஸ்தானத்தின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான். இவருக்கு அபிதா, சஜீதா மற்றும் ரபியா என மூன்று மகள்கள் இருந்தனர். இதில் சஜிதா இப்திகார் அலி கான் பட்டோடியை திருமணம் செய்து கொண்டு போபாலின் நவாப் பேகம் ஆனார். சஜிதா சுல்தானாவின் பேரன் தான் நடிகர் சையிப் அலி கான். பேரன் என்ற உரிமையின் கீழ் சையீப் அலி கான் நவாப் சொத்துக்களின் ஒரு பகுதியை உரிமையாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் மறைந்த நவாப் முகமது ஹமீதுல்லா கானின் வாரிசுகளான, பேகம் சுரையா ரஷீத் மற்றும் பிறர் சார்பில் ஒரு மனுவும், நவாப் மெகர் தாஜ் சஜிதா சுல்தான் மற்றும் இதர நபர்கள் சார்பில் மற்றொரு மனு என இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அரச சொத்துக்களை நியாயமற்ற முறையில் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு ஆண்டுக்குள் வழக்கை முடித்து முடிவெடுப்பதற்கான அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.