சென்னை: கொக்கைன் போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுடன் கைது செய்யப்பட்ட கெவின் கூட்டாளிகள் மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர்கள் காந்த், கிருஷ்ணா மற்றும் அஜய் வாண்டையார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. அடிப்படையில், கெவின், பிரசாத், ஜான், பிரதீப் குமார் ஆகிய 4 பேரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்ததாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அம்பத்தூரை சேர்ந்த தீபக் ராஜ் மற்றும் ஆண்டனி ரூபன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இமானுவேல் ரோகன் என்பவரை அரும்பாக்கம் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது சிறையில் அடைத்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் கிருஷ்ணாவிற்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கெவின் என்பவருக்கு போதை பொருள் விநியோகம் செய்தது இம்மானுவேல் ரோகன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் நடிகர் கிருஷ்ணாவுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட கெவினின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளையும் இமானுவேல் ரோகன் கையாண்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, விருகம்பாக்கம் பகுதியில் போதை விற்பனை கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா மற்றும் அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் விருகம்பாக்கம் பகுதிக்கு சென்று இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் சப்ளையர் கெவினின் நெருங்கிய கூட்டாளியான சென்னை வளசரவாக்கம் ஆற்காடுரோடு பகுதியை சேர்ந்த அரவிந்த் பாலாஜி (30), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார் பைனான்சியர் சுபாஷ் (29) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். செல்போனில் பேசிய நபர்கள் யார் என்பது குறித்த பட்டியலை போலீசார் தயார் செய்து வருகின்றனர். இந்த கும்பலை கைது செய்ய போலீசார் அதிரடி வேட்டை தொடங்கியுள்ளனர்.