திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மலையாள நடிகர்கள், டைரக்டர்கள், கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே மேற்குவங்க நடிகை அளித்த புகாரின் பேரில் பிரபல டைரக்டர் ரஞ்சித் மீதும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நடிகை அளித்த புகாரில் பிரபல நடிகர் சித்திக் மீதும் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த ஒரு நடிகை அளித்த புகாரில் பிரபல நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன் பிள்ளை ராஜு, முகேஷ் எம்எல்ஏ, இடைவேளை பாபு உள்பட 7 பேர் மீது ஒரேநாளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி இந்த வழக்குகளை இந்த குழுதான் விசாரணை நடத்தும். எஸ்பி பூங்குழலி தலைமையில் விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
படப்பிடிப்பின் போது ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நடிகை கரமனை போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடந்த படப்பிடிப்பின் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கொச்சியை சேர்ந்த ஒரு நடிகை அளித்த புகாரில் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் கன்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதையும் சேர்த்து தற்போது நடிகர் ஜெயசூர்யா மீதான வழக்கு 2 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் கேரள மாநில பாஜ செய்தித் தொடர்பாளர்களான வச்சஸ்பதி மற்றும் சிவசங்கர் ஆகியோர் தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை இதுவரை கேரள அரசு வெளியிடவில்லை. அறிக்கை கிடைத்து நான்கரை வருடங்களுக்கு பிறகே அரசு அதை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை வைத்து சிலரிடம் அரசு விலை பேசியுள்ளது. 290 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
எனவே முழு அறிக்கையையும் கேரள அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு கூறி தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, கேரள தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதை ஏற்று முழு அறிக்கையையும் கேரள அரசு மகளிர் ஆணையத்திடம் தாக்கல் செய்தால் இதுவரை வெளிவராத பல பெயர்களும், திடுக்கிடும் தகவல்களும் வௌிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* டைரக்டர் ரஞ்சித் மீதான புகாரை வாபஸ் பெற நிர்பந்தம்
டைரக்டர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபரும் புகார் தெரிவித்துள்ளார்.தான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது நடிக்க வாய்ப்பு கேட்டு டைரக்டர் ரஞ்சித்தை அணுகியதாகவும், அப்போது பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் வாலிபர் கூறினார். இதுதொடர்பாக அந்த நபர் கேரள டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்தார். இந்தநிலையில் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு கூறி பலர் தன்னை போனில் அழைத்து நிர்பந்திப்பதாக வாலிபர் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய புகாரில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
* இணையத்தில் விற்பனைக்கு வந்த நடிகர் சங்க அலுவலக கட்டிடம்?
மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் மோகன்லால் உள்பட மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். கொச்சி எடப்பள்ளி என்ற இடத்தில் மலையாள நடிகர்கள் சங்கத்துக்கு தலைமை அலுவலகம் உள்ளது. பலநவீன வசதிகளுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்தக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நடிகர் சங்க கட்டிடம் ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக யாரோ ஒருவர் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
20 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்தக் கட்டிடத்தில் 10 கழிப்பறைகள் உள்பட அனைத்து வசதிகளும் தயாராக இருப்பதால் உடனடியாக இங்கு வசிக்கத் தொடங்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக அவசரம் என்பதால் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் விற்பனையை முடித்து விட வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விளம்பரம் செய்தவரின் பெயர் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர் பல முன்னணி மலையாள நடிகர்களை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வருகின்றன. அதே பாணியில் தான் இப்போது ஓஎல்எக்ஸ்-லும் கிண்டல் செய்யும் நோக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.
* கதை சொல்ல வந்த இளம் பெண்ணிடம் அத்துமீறிய டைரக்டர்
மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் வி.கே. பிரகாஷ். இவர் புனரதிவாசம், முல்லவள்ளியும் தேன்மாவும், போலீஸ், பாசிட்டிவ், த்ரீ கிங்ஸ், பியூட்டிபுல், ட்ரிவேன்ட்ரம் லாட்ஜ் உள்பட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் கொல்லத்திலுள்ள ஒரு ஓட்டலில் இவரிடம் கதை சொல்ல சென்றபோது தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்று ஒரு இளம்பெண் கொல்லம் பள்ளித்தோட்டம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டைரக்டர் வி.கே. பிரகாஷ் மீது இபிகோ 354 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
* வீட்டிலேயே அடைந்து கிடந்த முகேஷ்
அடுத்தடுத்து பாலியல் புகார் கூறப்பட்ட போதிலும் நடிகர் முகேஷ் மீது நேற்று முன்தினம்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்தவுடன் திருவனந்தபுரத்திலுள்ள வீட்டிலேயே முகேஷ் முடங்கினார். வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து அவரது கருத்தை அறிந்து கொள்ள அன்று காலை முதல் இரவு வரை பத்திரிகையாளர்கள் வீட்டின் முன் காத்துக் கிடந்தனர். ஆனால் முகேஷ் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதற்கிடையே முன்ஜாமீன் கோரி அவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 5 நாட்கள் அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது. இந்தநிலையில் முகேஷ் நேற்று காலை காரில் கொச்சிக்கு புறப்பட்டார். வழக்கு குறித்து தன் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தவே அவர் கொச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது காரில் இருந்து எம்எல்ஏ என்று எழுதப்பட்டிருந்த பலகை அப்புறப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் பெயர் பலகை அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.