சென்னை: மறைந்த நடிகர் சோ சகோதரி வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகை திருடிய 2 வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் மாயா மோகன் (65). இவர் மறைந்த நடிகர் சோவின் சகோதரி ஆவார். கடந்த 11ம் தேதி சொந்த ஊரான ராசிபுரத்திற்கு மாயா மோகன் தனது குடும்பத்துடன் சென்றார். பிறகு 16ம் தேதி ஊரில் இருந்து திரும்பிய மாயா மோகன் தனது படுக்கை அறையில் உள்ள மர பிரோவை திறக்க சாவியை தேடிய போது சாவி கிடைக்கவில்லை. இதனால் அவரது பிரோவை வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் உடைத்து பார்த்த போது அதில் 15 சவரன் மதிப்புடைய தங்கம், வைர நகைகள், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் மாயமாகியிருந்தது.
வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் மாயமாகியிருந்ததால் வீட்டில் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த மரியா மகேஷ்வரி (43) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே மாயா மோகன் சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க, வைரம், வெள்ளிப் பொருட்கள் திருடு போனதாகவும், வீட்டு வேலை செய்யும் ெபண் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மரியா மகேஷ்வரியை பிடித்து விசாரித்த போது தனது தோழிகளான வித்யா (34), மயிலாப்பூர், லாலா தோட்டை சேர்ந்த தேவி (32) ஆகியோருடன் இணைந்து மர பீரோ மீது வைத்திருந்த சாவியை எடுத்து நகை, பணத்தை திருடியது ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து மரியா மகேஷ்வரி, வித்யா ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். மேலும் தலை மறைவாகியுள்ள தேவியை போலீசார் தேடிவருகின்றனர். அவர்களிடம் இருந்து நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.