திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நடிகர் சுரேஷ் கோபியின் காருக்கு நீண்ட நேரமாக வழி விடாமல் தொல்லை கொடுத்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகரும், முன்னாள் பாஜ எம்பியுமான சுரேஷ் கோபி, நேற்று விபத்தில் மரணமடைந்த மலையாள நகைச்சுவை நடிகர் கொல்லம் சுதியின் வீட்டுக்கு சென்றிருந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தனது காரில் திருச்சூருக்கு புறப்பட்டார். கொச்சி அருகே சென்றபோது முன்னால் ஒரு டேங்கர் லாரி நீண்ட நேரமாக வழிவிடவில்லை.
டிரைவர், ஹாரன் அடித்தும் அந்த டேங்கர் லாரி, சுரேஷ் கோபியின் காருக்கு வழி விடாமல் சென்றது. இடது புறமும், வலது புறமும் வளைந்து வளைந்து அந்த டேங்கர் லாரி சென்றது. சில சமயங்களில் லாரி மீது கார் மோதும் நிலையும் ஏற்பட்டது. இதனால் கொச்சி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சுரேஷ் கோபி போன் செய்து விவரத்தை கூறினார். உடனே போலீசார் விரைந்து சென்று டேங்கர் லாரியை மடக்கி பிடித்தனர். விசாரணையில் லாரி டிரைவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பரத் (29) என்றும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.