திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி நடந்ததைக் கண்டித்து திருச்சூரில் நேற்று பாஜ சார்பில் நடிகர் சுரேஷ் கோபி பாதயாத்திரை நடத்தினார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கருவன்னுர் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த வங்கியில் ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. வடக்கஞ்சேரி நகரசபை மார்க்சிஸ்ட் கவுன்சிலரான அரவிந்தாக்சன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான மொய்தீன் உள்பட பல கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த மோசடியை கண்டித்தும், வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும் பாஜ சார்பில் முன்னாள் எம்பியும், நடிகருமான சுரேஷ் கோபி தலைமையில் நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. கருவன்னூர் கூட்டுறவு வங்கி முன்பிருந்து பாஜ மாநில தலைவர் சுரேந்திரன் இந்த பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு 18 கிமீ தொலைவிலுள்ள திருச்சூர் மாநகராட்சி அலுவலகம் வை இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.