திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியன் பிள்ளை ராஜு, முகேஷ் எம்எல்ஏ உள்பட 7 பேருக்கு எதிராக எர்ணாகுளம் ஆலுவாவை சேர்ந்த மினு முனீர் என்ற நடிகை பலாத்கார புகார் கொடுத்தது மலையாள சினிமாவில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே நடிகை மினு முனீர் தன்னுடைய உறவினரின் 16 வயதான மகளை சென்னைக்கு கொண்டு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கொச்சி போலீசில் ஒரு புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஜெயசூர்யா, முகேஷ் உள்பட நடிகர்களுக்கு எதிராக தான் அளித்த புகாரை வாபஸ் பெறப்போவதாக நடிகை மினு முனீர் கூறினார். இந்நிலையில் நடிகை மினு முனீர் நேற்று கூறியது: எனக்கு எதிரான வழக்கை போலீசார் முறையாக விசாரிக்காததால் உணர்ச்சிவசப்பட்டு நடிகர்கள் மீதான புகாரை வாபஸ் பெறப் போவதாக கூறினேன். ஆனால், உறவினர்கள் கூறியதால் நடிகர்களுக்கு எதிரான புகாரை நான் வாபஸ் பெறப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.