சென்னை: நடிகர் ரஜினியை இயக்குநர் சீமான் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், இப்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கிய போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்து தம்பியின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்துக்கள் என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் சீமானை விமர்சித்து பேசினார். இதனால் கடுப்பான சீமான், ஆரம்பத்தில் தன்னை எதிர்த்தாலும், தான் அவரை ஆதரிப்பேன் எனக் கூறி வந்த நிலையில், மாநாட்டுக்குப் பிறகு இனி தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது என்றும், ‘திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள்’ என விஜயின் பேச்சுக்கு தனது கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களும் நாம் தமிழர் கட்சியினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாறி மாறி வார்த்தைகளால் தாக்கி கொண்டனர். அதேநேரம், சீமானின் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான முகமாக விளங்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது சீமானுக்கு சற்று பதற்றத்தைக் கொடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல், அவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வரும் செய்திகள், அதற்கு மேலாக சீமானுக்கு தலை வலியாக அமைந்து விட்டது. இது ஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த போது, சீமான் அவருக்கு நேரெதிரான நிலை எடுத்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழர் அல்லாதவர் தமிழக அரசியலில் ஆட்சிக்கட்டிலுக்கு வரக்கூடாது என கருத்துக்களை தெரிவித்தது அப்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓரிரு முறை மிகக் கடுமையான வார்த்தைகளைக் கொண்டும் அவர் விமர்சித்து இருந்தார். அதேநேரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தவுடன், சீமான் தனது விமர்சனங்களை நிறுத்திக் கொண்டார். குறிப்பாக 2022 டிசம்பர் மாதம், ரஜினிகாந்த்தை அரசியல் ரீதியாக விமர்சித்த போது கடும் சொற்களைப் பயன்படுத்தியது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று கூட கூறியிருந்தார். ரஜினி அரசியலைக் கடுமையாக விமர்சித்த சீமான், அவர் அரசியலுக்கு வரவில்லை என்றவுடன் தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியிருந்தார். இந்தச் சூழலில் சீமான் இப்போது திடீரென நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்றிரவு 8 மணி அளவில் இந்த ரகசிய சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நடந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் விஜய் வருகையை இப்போது சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்தை சீமான் சந்தித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.