புதுடெல்லி: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிக்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலக்கா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நில வளங்கள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகள் தயாரித்த இரண்டு வரைவுத் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, பல்வேறு தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக, புனர்வாழ்வு உரிமைகள் குறித்த தங்களின் பார்வைகளை முன்வைப்பதற்காக சமூக ஆர்வலர் மேதா பட்கர், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சிலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லாத மேதா பட்கர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றதற்கு, பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இதுகுறித்து பாஜக எம்பி புருஷோத்தம் ரூபாலா கூறுகையில், ‘தேசிய நலன் சார்ந்த திட்டங்களை எதிர்த்த மேதா பட்கருக்கு இந்தக் கூட்டத்தில் பேச உரிமை இல்லை.
நடிகர் பிரகாஷ் ராஜ் எதற்காக கூட்டத்திற்கு வந்தார்?’ என்றார். இதுகுறித்து காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலக்கா கூறுகையில், ‘அவர்களுக்கு மக்களவைத் தலைவரின் அனுமதி இருக்கிறது’ என்றார். ஆனால் இவரது பதிலை பாஜக எம்பிக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளைப் பேச அழைத்தபோது, பாஜக எம்.பி.க்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த அமளியால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.