பெரம்பூர்: முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாளை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் தொகுதி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’திறனில் அவரவர் உயர்வே, திராவிடம் நமது உணர்வே’’ என்ற தலைப்பில் சட்டத்துறை துணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்துரு ஏற்பாட்டில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது;
மாற்றுத்திறனாளி என்கின்ற துறையை உருவாக்கியவர் கலைஞர். அந்தத் துறையை உருவாக்கிய பிறகு தான் தமிழகத்தில் அவர்களுக்கு மதிப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறைக்கு முதலமைச்சர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியாவிலேயே இதுபோல பாதுகாவலனாக இருக்கக்கூடிய முதலமைச்சரை நாம் பார்க்க முடியாது.இவ்வாறு பேசினார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, ‘’இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு போல் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை எந்த ஒரு அரசும் சலுகைகள் வழங்கவில்லை. மின்சார பேருந்துகளை தொடங்கி வைத்து அதில் ஏறியதும் முதன்முதலில் முதலமைச்சர் கேட்ட கேள்வி இந்த பேருந்தில் மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு ஏறுவார்கள் அவர்களுக்கான அம்சங்கள் என்ன இருக்கிறது என்றுதான் கேட்டார். முதல் மரியாதை முதல் தேவை முதலில் யாரை நாம் திருப்திப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்ற முதலமைச்சரின் கருணையை இன்று நான் பார்த்தேன்.
ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ஒருவரின் புகைப்படத்தை காட்டினார்கள். உடனடியாக வருகை தந்திருந்த பார்வையாளர்கள் கைதட்டினார்கள். கைதட்டியவுடன் நாம் ஏதோ பயந்து மேடையை விட்டு இறங்கி விடுவோம் என்று நினைத்தார்கள். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட மாவீரனின் தலைமையில் நடைபோடும் இயக்கம் இது. இது 75 ஆண்டுகள் கடந்த திராவிட இயக்கம். இப்படிப்பட்ட கூச்சல், கூப்பாடுகள், விசில் சத்தங்களால் இந்த இயக்கத்தை முடித்துவிட முடியாது. இப்படிப்பட்ட கூச்சலுக்கு மத்தியில் 2026 மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அரியணையை அலங்கரிப்பார் என்று ஓங்கி குரல் கொடுத்தேன். சத்தமிட்ட குரல்கள் அடங்கிவிட்டது. கை தட்டிய கரங்கள் ஓய்ந்துவிட்டது’ என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திமுக மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் தீபக், கலாநிதி வீராசாமி எம்பி, மேயர் பிரியா, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார் கலந்துகொண்டனர்.