தர்மபுரி: தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதியதில், பிரபல நடிகரின் தந்தை உயிரிழந்தார். நடிகர், தாய், தம்பி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் சி.பி.சாக்கோ (70). இவரது மனைவி மரியா கார்மேல் (65). இவர்களது மகன்கள் ஷைன் டாம் சாக்கோ (41), ஜோ ஜோ சாக்கோ (38). இவர்களில் ஷைன் டாம் சாக்கோ (41) பிரபல சினிமா நடிகராவார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர் தாண்டா டபுள் எக்ஸ், அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான குட்பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை திருச்சூரில் இருந்து ஷைன் டாம் சாக்கோ தனது தந்தை சிபி சாக்கோ, தாய் மரியாகார்மேல், தம்பி ஜோ ஜோ சாக்கோ ஆகியோருடன் பெங்களூருக்கு காரில் புறப்பட்டார். காரை ஷைன் டாம் சாக்கோவின் மேலாளரான அனிஷ்க் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை 8 மணியளவில், தர்மபுரி- ஓசூர் தேசிய விரைவு சாலையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பாறையூர் பகுதியில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் ெசன்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. தகவலறிந்து பாலக்கோடு போலீசார் வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே சிபி சாக்கோ உயிரிழந்தது தெரிந்தது.
படுகாயமடைந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அவரது தாய் மரியா கார்மேல், தம்பி ஜோ ஜோ சாக்கோ மற்றும் மேலாளர் அனிஷ்க் ஆகியோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் 4பேரும், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் ஷைன் டாம் சாக்கோவிற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் காயமடைந்தவர்கள், திருச்சூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். சமீபத்தில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் ஷைன் டாம் சாக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.