சென்னை : நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் பிஜிலி ரமேஷ். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குநர் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ‘நட்பே துணை’, ‘ஏ1’, ‘ஜாம்பி’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘கோமாளி’, ‘ஆடை’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார். இவர் பேசும் ‘அதுதான் தவறான விஷயம்’ என்கிற வசனம் இளைஞர்களிடையே வெகுவாக பேமஸ் ஆகியிருந்தது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மருத்துவ செலவுக்காக அவரின் குடும்பம் நிதியுதவி வேண்டி இருந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் பிஜிலி ரமேஷ் காலமானதாக கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிஜிலி ரமேஷ் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.