சென்னை: நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் பொது இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைத்த தவெகவினர்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை தனித்தனியாக 53 வழக்குகள் பதிவு செய்துள்ளது. நடிகர் விஜய்க்கு நேற்று முன்தினம் பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி முன் அனுமதியின்றி சென்னை முழுவதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் தெரு முனைகளில் அதிகளவில் நடிகர் விஜய் புகைப்படத்துடன் 10 அடி மற்றும் 20 அடி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, சென்னை பெருநகர காவல் எல்லையில் வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, கோயம்பேடு, வில்லிவாக்கம் என 53 இடங்களில் பெரிய அளவில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் பேனர்கள் மற்றும் கொடிகள் அமைத்து, பொது இடங்களில் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் நடிகர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவலின்படி சென்னை பெருநகர காவல் எல்லையில் முன் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் பொது இடங்களில் பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டிய தமிழக வெற்றி கழகத்தின் மீது 53 வழக்குகள் தனித்தனியாக சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பேனர்கள் காவல்துறையினர் அகற்றினர். அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் தவெக வினர் தடுத்தனர். இருந்தாலும் போலீசார் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அபாயகரமாக அமைக்கப்பட்ட பேனர்களை அகற்றினர்.
வில்லிவாக்கத்தில் பேனர் விழுந்து 70 வயது முதியவர் படுகாயம்
சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் மோகன் (70), நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வில்லிவாக்கம் பெருமாள் கோயில் தெற்கு மாட வீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் பகுதி தவெக நிர்வாகிகள் அதிகளவில் பேனர்கள் வைத்திருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றில் பேனர்கள் பறந்து சாலையில் விழுந்தன. அதில் ஒரு பேனர் முதியவர் மோகன் தலையில் விழுந்தது. இதில் அவர் ரத்தக்காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மோகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் சோதனை செய்த போது, அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் சம்பவம் குறித்து மோகன் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி வில்லிவாக்கம் போலீசார் பேனர் வைத்த தவெக நிர்வாகிகள் மீது தனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.