சென்னை: நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்பாக ஆஜராகினர். கடந்த 2009ம் ஆண்டு நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், 2009ம் ஆண்டு பதிவு செய்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை 3வது குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜரான நிலையில், இருவரும் சமரச பேச்சுவாரத்தை நடத்த உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து 3 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்ததை அடுத்து, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயம் ரவி – ஆர்த்தி தனித்தனியாக வழக்கறிஞருடன் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையில், விவாகரத்து கேட்டது ஏன் என்று நடிகர் ரவி மோகன் பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கணவர் ரவி மோகனிடம் ஜீவனாம்சம் கேட்டு அவரது மனைவி ஆர்த்தி ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவுக்கு ரவி மோகன் ஜூன் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.