மதுரை: ‘அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரேசில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோர கிராமங்களில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தவில்லை. வறுமையால் மீனவ குடும்பங்களை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் படிப்பை தொடர முடியாமல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். எனவே, கடலோர கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், ‘‘தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022, செப்.15 முதல் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிநி நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.