சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் சீமான் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, பொதுச் செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர், இதுகுறித்து அனைத்திந்திய மாதர் சங்க பொதுச்செயலாளர் ராதிகா அளித்த பேட்டி: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கின் விசாரணை சுணக்கம் அடைந்துள்ளது.
அதனை தீவிரப்படுத்த வேண்டும். நடிகை விஜயலட்சுமி குறித்து மிக மோசமான வீடியோக்களை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சீமான் இதனை கண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி அப்போது அச்சுறுத்தல் காரணமாக வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது நீதி வேண்டும் என போராடுவதால் சீமான் மீது உரிய நடவடிக்கையை காவல்துறையினர் விரைந்து எடுக்க வேண்டும். எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் காவல்துறை விசாரணை நடத்தி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.