*ஆய்வின் போது தேனி எம்பி உறுதி
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் உறுதியளித்துள்ளார்.
ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் நேற்று தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் தற்போது அருகில் உள்ள நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் சேதமடைந்த பழைய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விரைவில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் ரோசனப்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காக சென்றிருந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களது பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளித்த எம்பி போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி தேனியிலிருந்து ஒக்கரைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்தை ரோசனப்பட்டி கிராமத்தின் வழியாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதேபோல் கன்னியப்பபிள்ளைபட்டி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் கதிர்நரசிங்கபுரம் பகுதியில் செல்லும் நாகலாறு ஓடையில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மழை நீர் விவசாய நிலங்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும், எனவே தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் நாகலாறு ஓடையில் நேரடியாக சென்று தடுப்பு சுவர் அமைக்கும் இடத்தை பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தடுப்பு சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் மகாராஜன், ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து, திமுக மாவட்ட பிரதிநிதி பொன்னுத்துரை, திம்மரசநாயக்கனூர் அறநிலையத்துறை அறங்காவலர் ராம்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.