Monday, March 4, 2024
Home » மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதா? மோடி அரசுக்கு அதிமுக பொதுக்குழு கண்டனம்: நாடாளுமன்ற தாக்குதலையும் கண்டித்து தீர்மானம்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதா? மோடி அரசுக்கு அதிமுக பொதுக்குழு கண்டனம்: நாடாளுமன்ற தாக்குதலையும் கண்டித்து தீர்மானம்

by Ranjith

சென்னை: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று கூறி ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நேற்று நடந்த அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு தமிழகத்தை பார்க்கிறது” என்று குற்றம்சாட்டினார். இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். அதன்படி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக நடைபெறும் பொதுக்குழு என்பதால் தனியார் மண்டபத்தில் முகப்பு வாயிலில் நாடாளுமன்ற கட்டிடத்தை போல பிரம்மாண்ட கட் அவுட் வடிவமைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய இசை நடனங்கள், குதிரை படை, பேண்டு வாத்தியம், பூரணகும்ப மரியாதை என உற்சாக வரவேற்புக்கிடையே எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்தார்.

ஏற்கனவே, மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு நிர்வாகிகள், மகளிர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் என அழைப்பிதழ் வழங்கப்பட்ட 2,800 பேர் என ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பொன்னையன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர். திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளர்கள் பா.பெஞ்சமின், பி.வி.ரமணா,

வி.மூர்த்தி, சிருணியம் பி.பலராமன், வி.அலெக்சாண்டர், மற்றும் எஸ்.அப்துல் ரஹீம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் சி.ஒய்.ஜாவித்அகமது, நகர செயலாளர்கள் பூந்தமல்லி கே.எஸ்.ரவிச்சந்திரன், திருவேற்காடு எஸ்.எஸ்.எஸ்.குமார், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித் உள்ளிட்ேடாரும் பங்கேற்றனர். வரவேற்புரை முடிந்ததும் மறைந்த மூத்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் தமிழ்மகன் உசேன் கேட்டுக்கொண்டபடி எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆவேசமாக பேசினர். குறிப்பாக, சி.வி.சண்முகம் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே நடந்த ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பேசி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடினார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுக்குழு தீர்மானத்தை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:

* தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை கொண்டுவர வலியுறுத்தல்.

* சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுடைய நலன்களை பாதுகாக்கவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

* நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13ம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது; ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்.

* ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைத்திட இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.

* ஈழத்தமிழர்களின் நலன் காக்க அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்.

* அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது.

* கச்சத்தீவை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒன்றிய அரசுக்கு எதிரான 3 தீர்மானங்கள் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக வரலாற்றிலேயே முதன்முறையாக 15 லட்சம் பேர் பங்கேற்ற ஒரு மாநாடு என்றால் அது மதுரை மாநாடு தான். அதேபோல், அதிமுக சோதனை மேல் சோதனைகளை சந்தித்த கட்சி. எத்தனை வழக்குகள், எத்தனை சிக்கல்கள் கட்சியை முடக்க எதிரிகளோடு கைகோர்த்து துரோகிகளும் இணைந்து கொண்டார்கள். ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் இரு பெரும் தலைவர்களின் சக்தியாலும், உங்களின் துணையோடும் அத்தனையும் வென்று காட்டினோம்.

ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடைபெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பதற்றத்தோடு பொதுக்குழுவில் நாம் சந்திப்போம். ஆனால், இந்த பொதுக்குழுவில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. நீதிமன்றத்திலும் நீதி வென்று, தேர்தல் ஆணையத்திலும் நமக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இனி அதிமுக ‘ஜெட்’ வேகத்தில் செயல்படும். தற்போதைய அரசு பேரிடர் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் ஒன்றிய அரசு மக்களின் பிரச்னைகளை உணர்ந்து தேவையான நிதி ஒதுக்க வேண்டும். ஒன்றியத்தில் காங்கிரஸ், பாஜ என யார் ஆட்சி செய்தாலும் ‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்’ தான் தமிழகத்தை பார்க்கிறார்கள்.

மாநில அரசு கேட்கிற நிதியை ஒன்றிய அரசு கொடுத்த வரலாறு கிடையாது. எனவே, மனிதாபிமானத்தோடு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்பது ஒன்றிய அரசின் கடமை. அதேபோல், பாஜவுடன் உடன் எப்போதும் கூட்டணி இனி இல்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்; அதில் எந்தவித மாற்றமுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

*என்னாது தயிரு வெள்ரிக்காயா.. காண்டான பொதுக்குழு உறுப்பினர்கள்
தம்ரூட் அல்வா, வெஜ் பிரியாணி, வெங்காயம், வெள்ளரி, மாதுளை தயிர் பச்சடி, பருப்பு வடை, புடலங்காய் கூட்டு, கோஸ், பீன்ஸ், கேரட் பட்டாணி பொறியல், பால்கறி கூட்டு, உருளைக்கிழங்கு மசாலா, வெண்டைக்காய், மொச்சை மண்டி, வத்தக்குழம்பு, கத்தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் சாம்பார், போண்டா மோர் குழம்பு, தக்காளி ரசம், தயிர், ஊறுகாய், மோர் மிளகாய், அப்பளம், பருப்பு நெய், அட பிரதமன் பாயாசம், வாழைப்பழம், ஐஸ்கிரீம், பீடா, வாட்டர் பாட்டில் என அதிமுக பொதுக்குழுவில் 21 வகை உணவு பரிமாறப்பட்டன. ‘மட்டன், சிக்கன், அட ரெண்டு துண்டு மீனாச்சும் உண்டா.. இப்பிடி முழுச் சைவமா போட்டு வெறுப்பேத்துறீங்களே..’ என பந்தியில் உட்கார்ந்த பல உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

* மாநில அரசு கேட்கிற நிதியை ஒன்றிய அரசு கொடுத்த வரலாறு கிடையாது.

* மனிதாபிமானத்தோடு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும்.

* மக்கள் பாதிக்கப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்பது ஒன்றிய அரசின் கடமை.

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi